உலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995

கேரளாவில் 54,000 பேர் வீடிழந்துள்ள‌னர்

54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, கோட்டயம், ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தின் 24 அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
இதனால் அணைகளையொட்டிய தாழ்வான பகுதிகள் மற்றும் ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்டதாலும், சாலைகளை வெள்ளம் அடித்துச் சென்றதாலும் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

மழை வெள்ளம் காரணமாக கடந்த 3 நாட்களாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
மழையினால் வீடு, வாசல்களை இழந்த 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ள 439 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

பெரியாறு ஆற்றின் கரையோரம் வசித்து வரும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எர்ணாகுளம் மாவட்டம் பரவூர், ஆலுவா, கனயன்னூர், குன்னத்நாடு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 401 அடி உயரம் கொண்ட இடுக்கி அணை தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து 5 மதகுகளிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீர் செருதோணி ஊருக்குள் புகுந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள பாலம், கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் ஆற்றின் கரையோரத்தில் இருந்த ஏராளமான கடைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் இடுக்கி அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும், தற்போது மழை குறைந்துள்ளதாலும் இடுக்கி அணையின் நீர் மட்டம் சற்று குறைந்துள்ளது.

ஆலுவாவில் பெரியாறு ஆற்றின் கரையோரம் உள்ள பிரபல சிவன் கோவிலின் பெரும் பகுதிகளை வெள்ளம் சூழந்துள்ளது. ஆற்றின் காரையோரம் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ராணுவம், கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படை, நீரில் மூழ்கி தேடும் வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்க 3 படகுகள், 20 உயிர்காக்கும் படகுகள், உயிர் காக்கும் ஆடை, சிறப்பு கயிறு பயன்படுத்தப்படுகிறது.
மாநிலத்தில் மழை, வெள்ளத்துக்கு இதுவரை 32 பேர் பலியாகி விட்டனர்.

இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மாநில முதல்–மந்திரி பினராயி விஜயன், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, வருவாய்த்துறை மந்திரி சந்திரசேகரன், மாநில தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ், தலைமை போலீஸ் அதிகாரி லோக்நாத் பெஹாரா ஆகியோர் நேற்று ஒரே ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டனர்.
மேலும் பினராயி விஜயன் நிவாரண முகாம்களுக்கு சென்றும் பார்வையிட்டார். அத்துடன் கலெக்டர் அலுவலகம் சென்று உயர் அதிகாரிகளுடன் பினராயி விஜயன் வெள்ள நிலவரம் குறித்து ஆய்வு நடத்தினார்.

மழையால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு தொகையாக கேரள அரசு அறிவித்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொச்சி விமான நிலையத்தில் வழக்கம் போல் விமான சேவை தொடருவதாகவும், எந்த விமானமும் ரத்து செய்யப்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபடுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கட்சி தொண்டர்களை கேட்டுக்கொண்டு உள்ளார்.
இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெய்துள்ள மழை, கேரளாவில் பெரும் அழிவை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும், சொத்துகளையும் இழந்துள்ளனர். எனவே ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டும். இந்த வேதனையான தருணத்தில் எனது வேண்டுதல்களும், சிந்தனைகளும் பாதிக்கப்பட்ட கேரள மக்களின் குடும்பங்களைப் பற்றியே உள்ளது’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இன்னொரு பதிவில், மாநில அரசுடன் மத்திய அரசு நிவாரண மற்றும் புனர்வாழ்வு பணிகளில் ஒத்துழைத்து செயல்படும் என்று நம்புகிறேன். வெள்ள நிவாரண பணிகளுக்காக கேரளாவுக்கு போதிய நிதி உதவியை பிரதமர் மோடி வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கேரளா வருகிறார்.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தேக்கடி ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. மழை ஓய்ந்த பின்னர் மீண்டும் படகு சவாரி தொடங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே இன்னும் 4 நாட்களுக்கு கனத்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்

தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தில் தீவிரம் அடைந்து உள்ளதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய 2 அணைகளில் இருந்தும் காவிரி ...

This site is protected by wp-copyrightpro.com